எஸ்ஐஆர் பணிகளை ரத்து செய்ய வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்

திண்டுக்கல்லில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (06.12.25) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் ஆத்தூர் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் எஸ்ஐஆர் (Special Intensive Revision) பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் குளறுபடியாக உள்ளன. அவர்கள் எங்குமே சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கவில்லை. கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். எஸ்ஐஆர் பணிகள் முழுமையாகச் சரியாக நடைபெறவில்லை,” என்று அவர் தெரிவித்தார். ஆகையால், இந்தப் பணிகளை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “சூப்பர் செக் (Super Check) மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறுவது தவறு. எந்த ஊரிலும் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை,” என்று ஆட்சியரின் கூற்றையும் அவர் மறுத்தார்.

மேலும், பாலக்கனூத்து, நரிப்பட்டி, நீலமலைக்கோட்டை போன்ற பகுதிகளில் இறந்தவர்களைக்கூட வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.தனது சட்டமன்றத் தொகுதியான ஆத்தூரில் வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். “எனது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே இரவில் குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் எனக் கூறி 22,000 வாக்காளர்களை நீக்கி உள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.பிஎல்ஓ (Booth Level Officers) அதிகாரிகள் வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக வீடு வீடாகச் செல்லவில்லை என்றும், மாறாக, “அறையில் அமர்ந்து ஒரே இரவில் நீக்கி விட்டார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார். முறையாகப் பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பங்களைக் கூட, குடிபெயர்ந்து விட்டனர் எனக் கூறி மாற்றிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். “இதுபோன்ற அதிசயம் ஆத்தூர் தொகுதியில் நடைபெற்றுள்ளது” என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் விளக்கமளித்தார். “திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். “மேல்முறையீடு செய்வது என்பது எங்களது அடிப்படை உரிமை. நீதிமன்றம் கொடுக்கக்கூடிய தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. சட்டமே சொல்கிறது, உங்களது உரிமைகளைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் என கூறியுள்ளது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளோம்,” என்று அவர் அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் கூறாதது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலளித்தார்.இதுகுறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அவர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் கண்டிப்பாக கருத்து கூறுவார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version