சென்னை: எம்ஜிஆர் நடிப்பில் 1961ஆம் ஆண்டு வெளியான ‘அரசிளங்குமரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன பயலே சின்ன பயலே” பாடலை மீண்டும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் தமிழக அமைச்சர் எ.வ.வேலு. இதனால், அந்த பதிவின் பின்னணியில் யாரை சுட்டிக்காட்டுகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஆன்மீக தமிழ் – திராவிட தமிழ் குறித்து பேசியபோது, அந்தப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார் அமைச்சர் வேலு. அந்த நேரத்தில் அவர், “இந்த பாடலில் வரும் ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும்’ என்ற வரிகள் வளர்ச்சிக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இதுதான் திராவிட மாடலின் அடிப்படை” எனக் கூறியிருந்தார்.
அவர் மேலும், “மக்கள் திலகம் எம்ஜிஆரின் முதல் ரசிகர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்தான். எம்ஜிஆர் நடித்த படங்கள் வெளியாகும்போது அவர் முதல்வருடன் அவற்றைப் பற்றி பேசுவார். அண்ணாவின் பிறந்தநாளில் கூட எம்ஜிஆர், ஸ்டாலினை அழைத்து விழாவை கொண்டாடியுள்ளார். இன்று அவர் குழந்தைகளை தூக்கி ஆசீர்வதிக்கும் போது அந்தப் பாடல் வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது” எனக் கூறியிருந்தார்.
அப்போது கூறிய இந்த உரையின் வீடியோவை, தற்போது மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எ.வ.வேலு. இதனால், அவர் தற்போது அந்தப் பாடலை எதற்காக நினைவூட்டுகிறார், யாரை குறிக்கிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
			















