திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டு, தகுதியானவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தத் திட்டம் கட்சி, மதம், இனம் பேதமின்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது,” என்று கூறினார். அமைச்சர் மேலும், “தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களில் தீர்க்கப்படும்,”என்று தெரிவித்தார். பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் நிறைவு பெற்றதும் 93 ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு தினமும் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதனால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத சூழல் உருவாகும் என அமைச்சர் தெரிவித்தார். பெண்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை அமைச்சர் விளக்கினார்: விடியல் பயணத் திட்டம்: பெண்கள் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதன் மூலம் மாதம் ரூ.900 வரை சேமிக்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: மாதம் ரூ.1,000 வழங்கப்படும் திட்டத்தின் மூலம் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
கணக்கன்பட்டியில் உள்ள 1,643 குடும்ப அட்டைகளில் 1,003 நபர்கள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். மேலும் 250 மனுக்கள் பெறப்பட்டுள்ளன; இவை டிசம்பர் 15-ம் தேதி தீர்க்கப்பட்டு நிதி வழங்கப்படும். அமைச்சர் மேலும், “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம் செயல்படுகிறது. இது இந்தியாவிலேயே எங்கும் இல்லாத புதுமையான முயற்சி,” என்று குறிப்பிட்டார்.
‘புதுமைப்பெண்’ திட்டம்: 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம்: ஆண் மாணவர்களுக்கும் அதே அளவு நிதி உதவி வழங்கப்படுகிறது. 20 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தை: ரூ.15 கோடியில் புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரி கட்டிடம். அம்பிளிக்கையில்: பெண்களுக்கான அரசு கல்லூரி ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.
விருப்பாட்சி: அரசு தொழிற்பயிற்சி நிலையம் சிறப்பாக இயங்குகிறது. காளாஞ்சிப்பட்டி: ரூ.12 கோடி மதிப்பில் “கலைஞர் நூற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையம்” உருவாக்கப்பட்டு, பல மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கணக்கன்பட்டியில் 197 திட்டப்பணிகள் ரூ.8 கோடி மதிப்பில் நடைபெறுகின்றன. “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 71 வீடுகள் ரூ.2.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. 24 வீடுகள் பழுது நீக்கும் பணிகள் ரூ.27 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை, கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகளுக்கான மனுக்கள் விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிய “தாயுமானவர் திட்டம்” மூலம், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் இரு நாட்கள் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுவரை 20 இலட்சம் பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை கல்வியைத் தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 12 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 6 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பழனி வட்டாட்சியர் திரு. பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, நளினா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
