மியான்மரில் பள்ளிகள் மீது அரசு ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 19 மாணவர்கள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் அரசுக்கு எதிராக சின், ராக்கைன் உள்ளிட்ட மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப் படை பல ஆண்டுகளாக தனிநாடு கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் அராகன் படையினரும், அரசு ராணுவத்தினரும் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு அமைந்திருந்த இரண்டு தனியார் பள்ளிகளின் மீது அரசு ராணுவம் சுமார் 227 கிலோ வெடிமருந்துகள் கொண்ட வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த கொடூரத் தாக்குதலில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பாவி மாணவர்கள் உயிரிழந்ததில் துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்ததாக அராகன் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த யுனிசெப், “இது ஒரு கொடூரமான தாக்குதல்; குழந்தைகள் மீது நடத்தப்பட்ட அநீதியான வன்முறை” எனக் குறிப்பிட்டுள்ளது.
