மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், உலகளாவிய அளவில் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது நிறுவத்தின் மொத்த ஊழியர்களில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களை உள்ளடக்கியது.

இந்த வேலைநீக்கம் LinkedIn உள்ளிட்ட மைக்ரோசாஃப்ட் உட்பிரிவுகளையும் பாதிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

நிறுவனம் கூறுகையில், தற்போது சந்தையில் உள்ள கடும் போட்டி மற்றும் வளர்ந்து வரும் செலவுகளை சமாளிக்க பணிநீக்கம் தவிர வேறு விருப்பங்கள் இல்லை எனவும், இது நிறுவனத்தின் நிர்வாக நலனுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானம் எனவும் கூறியுள்ளது.

இது முதல் தடவையல்ல – கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், மைக்ரோசாஃப்ட் உலகம் முழுவதும் 228,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதற்கு முன்னதாக 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஹோலோலென்ஸ் (HoloLens) ஆக்மென்டட் ரியாலிட்டி சாதனம் மற்றும் பிற வன்பொருள் பிரிவுகளில் பணிபுரிந்த சுமார் 10,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது.

தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் சேவைகள் தொடர்பான முதலீடுகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக Azure மற்றும் AI சார்ந்த சலுகைகளை ஆதரிக்க, மைக்ரோசாஃப்ட் இந்த நிதியாண்டில் மட்டும் தரவு மையங்களில் 80 பில்லியன் டாலருக்கு மேல் செலவிடவுள்ளது.

மைக்ரோசாஃப்ட் மட்டுமல்லாமல், பல முன்னணி டெக் நிறுவனங்களும் அதே பாதையில் செல்கின்றன. மெட்டா (Meta) நிறுவனம், செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தனது ஊழியர்களில் 5 சதவிகிதத்தை வெளியேற்றியது. அதேபோல் Salesforce நிறுவனமும், புதிய AI சார்ந்த வேலைகளை நோக்கி முன்னேறுவதற்காக 1,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version