அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திருமாவளவன், “எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்வதற்குக் காரணமாக இருந்தார். ஒரு பார்ப்பனப் பெண் திராவிட கட்சியின் தலைவராக அமையப் பாதை போட்டுக் கொடுத்தார்” என பேசியிருந்தார். மேலும், ஜெயலலிதா தன்னை பார்ப்பனப் பெண் என சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துகள் அதிமுகவினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழ்நாட்டின் கடந்த 60 ஆண்டுகளின் அரசியல் அமைப்பைப் பற்றிய உரையில், எம்.ஜி.ஆர். பற்றியும் குறிப்பிட்டேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர்களை பலமுறை பாராட்டியுள்ளேன். அவர்களை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரை எந்த ஒரு ஜாதிக்குள் சுருக்கியும் பார்க்கவில்லை. சிலர் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்றார்.
மேலும் அவர், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியது. அது கருணாநிதி எதிர்ப்பு அரசியலை மையமாகக் கொண்டிருந்தது. ஜெயலலிதா தன்னை பார்ப்பனப் பெண் என சட்டமன்றத்தில் கூறியதால், பார்ப்பனர்கள் கலைஞரை எதிர்த்த அளவிற்கு அதிமுகவையோ, எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ எதிர்க்கவில்லை என்பதையே நான் விளக்கமாக கூறினேன்” எனத் தெரிவித்தார்.