மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில், எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். தமிழகம்–கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, அணை நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று 9,828 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 31,954 கனஅடியாகவும், மாலை 36,985 கனஅடியாகவும் உயர்ந்தது. தற்போது டெல்டா பாசனம் மற்றும் கால்வாய்களுக்கு வினாடிக்கு 23,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.5 அடி என்றும், நீர் இருப்பு 92.5 டிஎம்சி என்றும் பதிவாகியுள்ளது. அணை நிரம்ப இன்னும் அரை டிஎம்சி நீர் மட்டுமே தேவைப்படுகிறது.
இதனால், அணையில் இருந்து உபரி நீர் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புடன் இருக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
















