டிசம்பரில் இந்தியா வருகிறார் மெஸ்ஸி ; பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, மூன்று நாள் பயணமாக டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பை உட்பட பல முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்தவர். தற்போது, அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த மேஜர் லீக் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி மெஸ்ஸி கோல்கட்டா வருகிறார். அங்கு, கால்பந்து விளையாட்டில் அவர் காட்டிய அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழா, 7 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான கால்பந்து தொடர் மற்றும் குழந்தைகளுக்கான பயிற்சி நிகழ்ச்சி இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கலந்துகொள்கிறார்.

இதன்பின் மெஸ்ஸி மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். ரசிகர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதி அவர் தலைநகர் டில்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுவார். பின்னர், தனது சொந்த நாட்டிற்குத் திரும்புவார்.

மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியை கேரளா அழைத்து வர மாநில அரசு முன்பு முயற்சி செய்திருந்தது. இதற்காக ரூ.130 கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அணி வராததால் கேரள அரசு மற்றும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தற்போது அறிவிக்கப்பட்ட பயணத் திட்டத்தில் மெஸ்ஸி கேரளா செல்லுவார் என்ற தகவல் இல்லை. இதனால் அங்குள்ள ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Exit mobile version