நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருக்கு, விபத்து நடந்த பகுதியான நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் ராணுவத்தின் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் கமண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மனீஷ் எர்ரீ அவர்கள், மலர் வளையம் வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 ராணுவ வீரர்கள் பயணம் செய்த இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவம் நடந்த நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் இன்று, விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவத்தின் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி காமண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மனீஷ் எர்ரீ அவர்கள் தலைமையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தன்னலமற்ற சேவைக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நினைவஞ்சலி நடத்தப்பட்டது.
