மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மேலூர் நகர் 25-வது வட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில், மேலூர் – திருவாதவூர் சாலையில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. வீர விளையாட்டான மாட்டு வண்டிப் பந்தயத்தைப் பாதுகாக்கும் விதமாகவும், கிராமியப் பண்பாட்டைப் போற்றும் விதமாகவும் நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) செல்வம் தலைமை தாங்கினார். மேலூர் நகரச் செயலாளர் எஸ்.எம். சரவணகுமார் மற்றும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.ஓ. சாகுல் ஹமீது ஆகியோர் வரவேற்புரை ஆற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா அவர்கள் அ.தி.மு.க. கொடியசைத்து இந்தப் பிரம்மாண்டப் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார். மேலூர் சாலையே அதிரும் வகையில் சீறிப்பாய்ந்த காளைகளைக் கண்டு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக முழக்கமிட்டு ரசித்தனர். முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் 7 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து முதலிடம் பிடித்த கொட்டகுடி தர்ஷனா அவர்களுக்கு ரூ.50,001 பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை தேனி பண்ணைபுரம் ஜோஷன்னா மற்றும் கூடலூர் ஆலமரத்தான் சசி ஜோடி (ரூ.35,001) பிடித்தது. மூன்றாம் இடத்தை புலிமலைப்பட்டி முனிச்சாமி (ரூ.25,001) அவர்களது மாடுகளும், நான்காம் இடத்தை அவனியாபுரம் மோகன் சாமிகுமார் (ரூ.10,001) அவர்களது மாடுகளும் தட்டிச் சென்றன.
தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஜோடி மாடுகள் களமிறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மேலூர் சிக்கிபாய் – சின்ன மாங்குளம் அழகு அவர்களது மாடுகள் முதல் பரிசை (ரூ.25,001) வென்றன. இராஜவன்னிபுரம் பரமசிவ பாண்டியன் இரண்டாம் பரிசையும் (ரூ.20,001), கிடாரிப்பட்டி ஆண்டி அரசு மூன்றாம் பரிசையும் (ரூ.15,001), பொன்பேத்தி மருதுபாண்டிய வள்ளால தேவர் நான்காம் பரிசையும் (ரூ.10,001) பெற்றனர். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ மற்றும் மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் செல்வம் ஆகியோர் வெற்றிக் கோப்பைகளையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
இந்த விழாவில் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் அம்பலம், முன்னாள் யூனியன் தலைவர்கள் பொன்னுச்சாமி, வெற்றிச்செழியன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் பொன்ராஜேந்திரன், குலோத்துங்கன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். 25-வது வார்டு வட்டச் செயலாளர் ஜி. திருப்பதி அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பந்தயம், மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அரசியல் எழுச்சியையும் ஏற்படுத்தியது. வீரத்திற்கும் வெற்றிக்கும் அடையாளமான இந்தக் காளைகளின் அணிவகுப்பு, புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒரு கம்பீரமான மகுடமாக அமைந்தது.
