கோவை:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுக–பாஜக கூட்டணியில் டிசம்பர் இறுதிக்குள் பெரிய மாற்றங்கள் வரப் போகின்றன என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கூட்டணிகள், கார்த்திகை தீப தீர்ப்பு, வாக்காளர் பட்டியல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
“ஒரே மாதத்தில் கூட்டணியில் முக்கிய முன்னேற்றம்”
அடுத்த ஒரு மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மேலும் வலுவான அமைப்பாக உருவாகும் என வானதி கூறினார். “தமிழ்நாட்டில் பலமான கூட்டணி எங்களுக்கு தான். திமுக கூட்டணி பலம் வாய்ந்ததல்ல. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாம் பெரிய கட்சியா?” என்று அவர் எதிர்வினை தெரிவித்தார்.
விஜய்–அமித்ஷா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “யார் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்று டெல்லி நிர்வாகம் தீர்மானித்துவிடும். அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை,” என்றார்.
கார்த்திகை தீப வழக்கு – திமுக மீது குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்ததை வானதி கடுமையாக விமர்சித்தார். “இந்துக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தை திமுக இரண்டாம் பட்சமாக பார்க்கிறது; மீண்டும் சிக்கல் உருவாக்கத் துணிகிறது,” என அவர் குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல்
தமிழ்நாடு முழுவதும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக வானதி தெரிவித்தார். டிசம்பர் 11 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் பெயர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
2026 தேர்தல் தயாரிப்பில் பாஜக முழு வீச்சில்
பாஜக, வருகிற டிசம்பர் 7 அன்று கோவை முழுவதும் பெரிய கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை இன்னும் உறுதியாகவில்லை என்றும் அவர் கூறினார்.
“2026 தேர்தலில் திமுகவினரே தங்களது ஆட்சியை நீக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்,” என்றும், “நேற்று கமல்… இன்று விஜய்… 2026க்கு பிறகு கூட்டணிகள் குறித்து பேசலாம்,” என்றும் வானதி தெரிவித்தார்.
கோவை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்காக ரூ.2.46 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி வருவதாக வானதி அறிவித்தார். அரசின் நிதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், பெண்களின் கல்விக்கான உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
