சென்னை : நீண்ட நாட்களாக நீடித்து வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்சனைக்கு மத்தியஸ்தர் மூலம் சமரச தீர்வு எட்டப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டதை தயாரிப்பாளர் சங்கம் ஆதரித்தது. இதற்கு பெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் தனது உறுப்பினர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கக்கூடாது என பெப்சி ஏப்ரல் 2ஆம் தேதி தனது உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியது.
இதனால் பல படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்து இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று வழக்கு நீதிபதி தன்பால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் தயாரிப்பாளர் சங்கமும் பெப்சியும் பரஸ்பரம் சமரசம் செய்து கொண்டதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிமன்றம், வழக்கை முடித்து வைக்கும் உத்தரவை வழங்கியது.