தமிழ் சினிமாவின் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம், இப்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகிய ‘மயிலா’ திரைப்படம், 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) 2026-இல் `பிரைட் ஃப்யூச்சர்’ பிரிவில் திரையிடப்பட உள்ளதை உறுதி செய்துள்ளது. திரைபடம் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறும் விழாவில் அனைத்து மொழித் திரைப்படங்களுடன் கலந்து காண்பிக்கப்படும்.
‘மயிலா’ திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணையாகக் கொண்டு, தன் சுதந்திரம் மற்றும் சுயமரியாதைக்காக போராடும் பெண்ணான பூங்கொடி கதையை முன்வைக்கிறது. மகளான சுடர் பார்வையில், தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை படம் சொல்லி வருகிறது.
பிரபல திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் வழங்கும் இந்த படத்தில் மெலோடி டார்கஸ், வி. சுடர்கொடி, கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், RJ பிரியங்கா மற்றும் ஜானகி சுரேஷ் நடித்து உள்ளனர்.
பா. இரஞ்சித் செம்மலர் அன்னம் குறித்து கூறியபடி, “‘மயிலா’ எளிய பின்னணியிலிருந்து வரும் உழைக்கும் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை மிக இயல்பாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறது. மெலோடி மற்றும் சிறுமி நடித்த நடிப்பும் படத்தை மிகச் சிறப்பாக உயர்த்தியுள்ளது. இது ஒரு கவிதையைப்போல் எனக்கு அழகான பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது” என்று பகிர்ந்துள்ளார்.
‘மயிலா’ தமிழ்சினிமாவில் புதிய இயக்குநர் குரலை உணர்த்தும் முயற்சியாகவும், சர்வதேச திரையுலகில் புதிய கவனத்தை பெறும் படைப்பாகவும் அமைந்துள்ளது.

















