“தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது” என்ற திருமாவளவனின் கருத்துக்கு, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக அரசின் சட்டப்படி, 240 நாட்கள் பணியாற்றியவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இதையே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கையாக வைக்கின்றன. துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்லாமல் பல துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களும் இன்னும் நிரந்தரம் செய்யப்படாத நிலை உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து,
“தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வைக்கும் பணி நிரந்தரம் என்பது சட்டபூர்வமான கோரிக்கையாகும். திருமாவளவன் கூறும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. எனக்குத் தெரிந்த ஒரு தூய்மை பணியாளர் குடும்பத்தில் பிறந்த பெண், பெற்றோர் நிரந்தர பணியாளர்களாக இருந்ததால் கிடைத்த வருமானத்தில் பிஎச்.டி. படித்து இன்று கல்லூரி பேராசிரியராக உள்ளார். பணி நிரந்தரம் வழங்கப்படாதிருந்தால், அந்த பெண்ணும் தூய்மை பணியாளராகவே இருந்து இருப்பார்.
பணி நிரந்தரம் என்பதே அந்தக் குடும்பத்திற்குப் பணி பாதுகாப்பையும், வருமான நிலைத்தன்மையையும் அளித்து, அடுத்த தலைமுறையை உயர்கல்வி பெறச் செய்யும் வாய்ப்பை தருகிறது. ஆகவே திருமாவளவன், அதியமான் உள்ளிட்டோர் கூறும் கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இப்போது பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கே நிரந்தரம் வழங்கப்பட வேண்டும். இதுவே நியாயமானது” என்று சண்முகம் தெரிவித்தார்.