இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் மின்சார காரை இன்று அறிமுகப்படுத்தியது. ‘இ-விடாரா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த கார், குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஹன்சல்பூரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மோடி, டிடிஎஸ் லித்தியம் அயன் பேட்டரி ஆலையின் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி பணிகளையும் தொடங்கி வைத்தார். தோஷிபா, டென்சோ, சுசூகி ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் 80% உள்நாட்டு உற்பத்தி தேவையை நிறைவேற்றும்.
100 நாடுகளுக்கு ஏற்றுமதி
இந்தியாவில் தயாராகும் இ-விடாரா மின்சார கார்கள், ஜப்பான் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதை “மேக் இன் இந்தியா திட்டத்தின் புதிய அத்தியாயம்” என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
“ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம் இந்தியாவில் கார்கள் தயாரித்து, அதையே ஜப்பானுக்கே ஏற்றுமதி செய்ய உள்ளது. இது இருநாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.
உற்பத்தித் துறையின் வேகமான வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில், உற்பத்தித் துறையில் 500% வளர்ச்சி, மொபைல் போன் உற்பத்தியில் 2,700% வளர்ச்சி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 200% வளர்ச்சி இடைப்பிடித்திருப்பதாக பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
‘மேக் இன் இந்தியா’ தாரக மந்திரம்
“இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலகுக்காக உற்பத்தி செய்யுங்கள் என்பதே நமது தாரக மந்திரம். அனைத்து மாநிலங்களும் போட்டியிட்டு சீர்திருத்தங்களை அமல்படுத்தி, வளர்ச்சிக்கு உகந்த கொள்கைகளையும் சிறந்த நிர்வாகத்தையும் வழங்க வேண்டும்,” என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அத்துடன், 13 ஆண்டுகளுக்கு முன் குஜராத் முதல்வராக இருந்தபோது மாருதி சுசூகி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கி வழங்கியதையும், இன்று அந்த முயற்சி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முக்கிய சாதனையாக மாறியிருப்பதையும் நினைவுபடுத்தினார்.