பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவுகள் துல்லியமாகவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை தடையின்றி பெறவும், கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் (Mandatory Biometric Update – MBU) சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 5 வயது மற்றும் 15 வயது அடையும் மாணவர்களுக்கு கட்டாயமாக ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்பட வேண்டும். இதற்காக, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் யுஐடிஏஐ இணைந்து, மாணவர்களின் ஆதார் புதுப்பிப்பு நிலையை UDISE+ பயன்பாட்டில் ஒருங்கிணைத்துள்ளது.
யுஐடிஏஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பல பெற்றோர்கள் கடைசி நேரத்தில் ஆதார் புதுப்பிப்புக்காக அவசரப்படுவது பதற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ஆனால், சரியான நேரத்தில் புதுப்பித்தால் இந்த சிரமங்களைத் தவிர்க்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
யுஐடிஏஐ தரவின்படி, நாடு முழுவதும் சுமார் 17 கோடி ஆதார் எண்கள் இன்னும் கட்டாய புதுப்பிப்புக்காக நிலுவையில் உள்ளன. இதைச் செய்யாத பட்சத்தில், குழந்தைகள் அரசின் நலத்திட்டங்கள், அத்துடன் நீட், ஜேஇஇ, சியுஇடி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளில் பங்கேற்கும்போது சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில்,
“பள்ளிகள் வழியாக கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கான முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் நிலுவையில் உள்ள புதுப்பிப்புகளை விரைவாக முடிக்கலாம். மாணவர்களும் பெற்றோர்களும் கடைசி நேரத்தில் பதற்றப்படுவதைத் தடுக்கலாம்” என வலியுறுத்தியுள்ளார்.
ஏன் அவசியம்?
வங்கிக் கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட் பெறுதல், மொபைல் சிம் வாங்குதல் போன்ற தினசரி சேவைகளில் ஆதார் கட்டாயமாக தேவைப்படுகிறது.
அரசாங்கத்தின் பல்வேறு நலத் திட்டங்கள் (எரிவாயு சலுகை, பி.எம்.கிசான் தொகை, ஓய்வூதியம்) அனைத்தும் ஆதாரின் மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செல்கின்றன.
ஒரே நபர் பல பெயர்களில் சலுகைகள் பெறுவதைத் தடுப்பதோடு, வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தையும் உறுதி செய்கிறது.
ஏன் கட்டாயம்?
“ஒரே நபருக்கான ஒரே அடையாளம்” என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதார் செயல்படுகிறது. எனவே கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிப் பரிவர்த்தனை, அரசுத் திட்டங்கள் என எந்தத் துறையிலும் தடையின்றிச் சேவைகள் கிடைக்க, ஆதார் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டும் துல்லியமாகவும் இருக்க வேண்டும்.