தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டிப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகளை விஷம் கலந்த வாழைப்பழங்கள் மூலம் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விவசாயக் கூலி வேலை செய்பவர் ஒருவரைத் தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கெங்குவார்பட்டிப் பகுதியில் உள்ள மத்துவார் குளம் வறண்டு காணப்படுவதால், இப்பகுதியில் உள்ள நீர்ப்பாசன நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இதனால், இப்பகுதி மக்கள் தங்களுடைய கால்நடைகளை இந்தத் தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
வழக்கம்போல், டிசம்பர் 9, 2025 அன்று, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ராமு மற்றும் ராமராஜ் ஆகியோர் தங்களுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றுள்ளனர். சுமார் மதியம் 3 மணி அளவில், மேய்ச்சலில் இருந்த கால்நடைகள் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளன. இதைக் கண்டு கால்நடை உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமானவர் ஊத்தாங்கல் புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலி வேலை செய்து வரும் கதிரவன் (45) என்பது தெரியவந்தது.
விசாரணையில், கதிரவன் என்பவர் வாழைப்பழங்களில் விஷத்தை ஏற்றி, கால்நடைகள் மேய்ச்சலுக்கு வரும் இந்தத் தரிசு நிலங்களில் தூவிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. கதிரவன் ஏற்கெனவே இப்பகுதியில் மேய்ச்சலுக்கு வருபவர்களைத் தகாத வார்த்தையில் திட்டுவது, கால்நடைகளை அடித்து விரட்டுவது, மேலும் ‘இங்கு கால்நடைகள் வந்தால் கொன்று விடுவேன்’ என்று மிரட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கால்நடைகளின் மேய்ச்சலால் தனது வேலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதோ அல்லது நிலப் பிரச்னையோ காரணமாக இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளரான ராமு உடனடியாகத் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், தேவதானப்பட்டி சார்பு ஆய்வாளர் ராமசாமி உடனடியாக வழக்கு பதிவு செய்தார். அவரது தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த கால்நடைகளின் உடல்களைக் கைப்பற்றினர். அத்துடன், கால்நடைகளைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட, விஷம் ஏற்றித் தூவப்பட்ட வாழைப்பழங்களையும் ஆதாரமாகக் கைப்பற்றினர்.
சம்பவ இடத்திலேயே, கெங்குவார்பட்டி கால்நடை மருத்துவக் குழுவின் உதவியுடன் கால்நடைகளின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கொலையின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, கால்நடைகளின் உடல் பாகங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட விஷம் கலந்த வாழைப்பழங்கள் ஆகியவை உடனடியாக ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வக முடிவுகளின் அடிப்படையில், பயன்படுத்தப்பட்ட விஷத்தின் தன்மை குறித்துத் தெளிவான விவரங்கள் தெரியவரும். உடற்கூறு ஆய்வுப் பணியின்போது கெங்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உடனிந்து அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்தார். கால்நடைகளை விஷம் வைத்துக் கொன்ற கதிரவன் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம், கால்நடை வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பாதுகாப்புக் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கால்நடைகள் மீதான இது போன்ற கொடூரச் செயல்கள் தவிர்க்கப்பட, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















