மதிமுகவில் நீண்டகாலம் வைகோவுடன் பயணம் செய்த மல்லை சத்யா, கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் பின்னணியில், தனியாக புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து அறிவிக்கவிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைகோவின் மகன் துரை வைகோவின் செல்வாக்கை எதிர்த்து, “வாரிசு அரசியல்” குற்றச்சாட்டை முன்வைத்து, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய மல்லை சத்யா, சமீப மாதங்களில் கட்சித் தலைமையுடன் கடும் மோதலில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதோடு, விளக்கம் அளிக்கவும் வைகோவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், உட்கட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்திய சத்யா, பல்வேறு சந்தர்ப்பங்களில் வைகோவின் முடிவுகளை கடுமையாக விமர்சித்தார். இதனால், அவர் மீண்டும் மதிமுகவில் சேர்வது சாத்தியமற்றதாகியுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், தேவதாஸ், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்ட மல்லை சத்யா, புதிய கட்சி தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறவுள்ள “அண்ணா பிறந்த நாள் மாநாடு”வில், கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக, தவெக ஆகியவை கூட்டணித் திட்டமிடலில் தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், மல்லை சத்யா யாருடன் கூட்டணி அமைப்பார் என்பதும், மதிமுகவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.