திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள குமரன் குன்று முருகன் கோவிலை அகற்றும் நடவடிக்கையின் போது, இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்த நிலையில், நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்றில் அமைந்துள்ள இந்த முருகன் கோவில், வருவாய்த்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி, அதனை அகற்றுவதற்கான நோட்டீஸை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வழங்கியிருந்தது. இதற்கு உள்ளூர் மக்களும் பக்தர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் சிலைகளை அகற்ற முற்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர், கோவில் இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அதிகாரிகள் சிலைகளை அகற்ற முயன்றபோது, போராட்டக்காரர்கள் அவர்களைத் தடுத்ததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இது பின்னர் தள்ளுமுள்ளுவாக மாறியதில், கூட்டத்தைக் கலைக்க போலீசார் பலப்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் என சுமார் 200 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். கோவில் அமைந்துள்ள பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், ஈட்டிவீரம்பாளையம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டும் நிலையில், நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு விதிமுறைகளின்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதால், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.














