தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மருத்துவத் தலைமையிடமாகத் திகழும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறையைத் (Plastic Surgery Department) தொடங்கி சாதனை படைத்து வருகிறது. வாகன விபத்துகள், பட்டாசு விபத்துகள் மற்றும் மோதல்களால் காயமடைந்து மாதந்தோறும் 900 முதல் 1,000 பேர் வரை இத்துறையில் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மூக்கு மற்றும் காது பகுதிகளில் ஏற்படும் அங்கக் குறைபாடுகளைச் சரிசெய்வதில் இத்துறை நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி வருவதாகத் துறைத் தலைவர் டாக்டர் அறம் தெரிவித்துள்ளார்.
முகச் சீரமைப்பு மற்றும் திசு ஒட்டுறுப்பு: சண்டைகளின் போது சில நேரங்களில் மூக்கு மற்றும் காதுகளைக் கடித்துத் துப்பும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்கின்றன. மூக்கின் நுனிப்பகுதி கடிக்கப்படும்போது முகம் சிதைந்து அங்கஹீனம் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளுடன் மாதம் 3 முதல் 5 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். முகத்தின் நிறமும் மற்ற உடல் உறுப்புகளின் நிறமும் மாறுபடும் என்பதால், பாதிக்கப்பட்டவரின் கன்னத்துச் சதை அல்லது நெற்றிப் பகுதியிலிருந்தே சதை எடுக்கப்பட்டுத் துண்டான மூக்கின் நுனியில் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, முகம் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது.
காது மடல் உருவாக்கம்: விபத்துகளில் காது தேய்ந்து போவது அல்லது சண்டைகளில் காது மடல் துண்டாவதற்கும் இத்துறையில் தீர்வு காணப்படுகிறது. நோயாளியின் நெஞ்சுப் பகுதியில் உள்ள விலா எலும்பின் ஒரு சிறு பகுதியை எடுத்து, காது வடிவில் நுணுக்கமாகச் செதுக்கி குருத்தெலும்பாக மாற்றுகின்றனர். அதன் மேல் மெல்லிய சதை படலத்தை வைத்து, இழந்த காது மடலை மீண்டும் உருவாக்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான எச்சரிக்கை: வீட்டில் விளையாடும் குழந்தைகள் அஜாக்கிரதையாக வெந்நீர், சூடான சாம்பார் அல்லது ரசம் போன்றவற்றைத் தங்கள் மீது ஊற்றிக் கொள்வதால் ஏற்படும் தீக்காயங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், திருவிழாக்கள் மற்றும் துக்க நிகழ்வுகளின்போது இளைஞர்கள் பட்டாசுகளைக் கையில் வைத்து வெடிப்பதால் கைகள் மற்றும் விரல்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 3 பேர் கையில் தீக்காயத்துடன் சிகிச்சைக்கு வருவதாகவும், பாதிப்பு அதிகமாக இருந்தால் விரல்கள் துண்டாகும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பட்டாசு வெடிக்கவில்லை என அதன் அருகில் சென்று பார்க்கும் சிறுவர்கள் முகத்தில் தீக்காயம் ஏற்படுவதைத் தவிர்க்கப் பெரியவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் பட்டாசுகளைத் தரையில் வைத்து வெடித்தாலே தேவையற்ற கை இழப்புகளைத் தவிர்க்கலாம். தவிர்க்கக் கூடிய விபத்துகளை விழிப்புணர்வுடன் எதிர்கொள்வதன் மூலம் உடலுறுப்புகளைப் பாதுகாக்க முடியும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
