மதுரை :
மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் வர வேண்டாம் என கழகத் தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது அறிவிப்பாக இது வெளியாகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான தவெக மீது தமிழக மக்களின் பேரன்பும் ஆதரவும் விரைவில் தேர்தல் அரசியல் களத்தில் நிரூபிக்கப்படும். 1967, 1977 ஆம் ஆண்டுகளின் வெற்றியைப் போல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே வரலாறு மீண்டும் நிகழும்.
தமிழக மக்களை உயிராகப் போற்றும் அக்கறையின் காரணமாகவே இந்த அறிவுரையை தெரிவிக்கிறேன். கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டோர், பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மாநாட்டிற்கு நேரில் வராமல், வீட்டிலிருந்தபடியே மாநாட்டை நேரலையில் கண்டு மகிழ வேண்டும்.
மேலும் மாநாட்டிற்கு வரும் அனைவரும் வருகையிலும், திரும்பிச் செல்லும் போதும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் கடைபிடிக்க வேண்டும். தவெக என்பது தகுதியும் பொறுப்பும் மிக்க அரசியல் பேரியக்கமென நமது ஒவ்வொரு செயலும் நிரூபிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
















