மாற்று மதத்தை குறிவைத்து வெளியிட்ட கருத்துகளால் இரு சமுதாயங்களிடையே பகைமை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி மதுரை ஆதீனத்துக்கு எதிராக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்கீழ் ஆதீனம் 2வது முறையாகவும் நேரில் ஆஜராக தவறியுள்ளார்.
கடந்த மே 2ஆம் தேதி, உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்து நேர்ந்தது. இதில் பயணித்த மதுரை ஆதீனம், “மாற்று மதத்தினர் தன்னை கார் மூலம் கொல்ல முயன்றனர்” என அளித்த வாக்கியம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை காவல்துறை நிராகரித்தது.
இந்த பேச்சு சமூக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஆதீனத்திற்கு எதிராக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஜூன் 30ஆம் தேதி, ஆதீனத்தை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி விசாரணைக்காக வருமாறு போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. தொடர்ந்து, ஜூலை 5ஆம் தேதி 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் இன்றும் சென்னை சேத்துப்பட்டு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆதீனம் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக தனிச்செயலாளர் செல்வக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். காணொளி மூலம் ஆஜராக அவர் விரும்பிய போதும், அதை போலீசார் நிராகரித்துள்ளனர்.
வயது மூப்பு காரணமாக நேரில் வர இயலவில்லை எனவும், கால அவகாசம் வழங்குமாறு மதுரை ஆதீனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.