சென்னை : மதுரை ஆதீனத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம், சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது, மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டின் போது பேசிய ஆதீனம், “இது தன்னை கொலை செய்ய திட்டமிட்ட சதி” என்றும், “இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம்” என்றும் கூறியிருந்தார். மேலும், தாக்குதல் நிகழ்த்திய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.
இந்த வகை பேச்சு, இரு மதக் குழுக்களுக்கு இடையே முரண்பாடும், பதற்றமும் உருவாக்கக்கூடியது எனக் கூறி, சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் ஆதீனத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, மதுரை ஆதீனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “விபத்து குறித்து ஊடகவியலாளர்கள் கேள்விக்கேற்ப தான் பதில் அளிக்கப்பட்டது. எந்த வகையிலும் தனக்கு எதிராக அறிக்கை வெளியிடவில்லை” எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.