காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்பதால், டிஎஸ்பியை நீதிமன்றத்தில் நாள் முழுவதும் அமர வைத்த பின்னர், சிறையில் அடைக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில், தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக மாவட்ட நீதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதனால் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது புலனாய்வு அதிகாரியின் அதிகார வரம்புக்குள் வரும்; இதற்காக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், டிஎஸ்பியை சிறையில் அடைக்க முன் நிர்வாக ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23-க்கு தள்ளி வைத்தார்.

Exit mobile version