கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

சென்னை : சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் இன்று தனது மனைவி ஸ்ருதியுடன் சென்னை சேப்பாக்கில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகினார்.

சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் ஜாய் கிரிஸில்டா என்ற பெண், ரங்கராஜ் மீது திருமண மோசடி குற்றச்சாட்டில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மகளிர் ஆணையம் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது.

முன்பாக அக்டோபர் 15-ஆம் தேதியே ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரங்கராஜ் தனது வசதிக்கேற்ப ஒரு நாள் தாமதமாக இன்று ஆஜராக அனுமதி கேட்டார். அதற்கும் ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இன்று காலை, கூலிங் கிளாஸ் அணிந்து, மனைவி மற்றும் வழக்கறிஞரான ஸ்ருதியுடன் ரங்கராஜ் ஆணைய அலுவலகம் வந்தார். இதே நேரத்தில் ஜாய் கிரிஸில்டாவும் தனது வழக்கறிஞருடன் வந்திருந்தார். இரு தரப்பினரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரில், “ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டு, இரு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக என்னை தவிர்த்ததோடு, எனது கர்ப்பத்திற்கும் பொறுப்பேற்கவில்லை,” என குற்றம்சாட்டியிருந்தார்.

அவர் அளித்த புகாரை முதலில் காவல் துறை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பின்னர், காவல் துறையின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த ஜாய் கிரிஸில்டா, மகளிர் ஆணையத்தையும் முதல்வரின் தனிப்பிரிவையும் அணுகினார்.

இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளதால், இரு தரப்பினரிடமிருந்தும் ஆணையம் விரிவான விளக்கங்களை இன்று பெற்றுக் கொள்ள உள்ளது.

Exit mobile version