இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக முத்தரசன் இ.கம்யூ மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக அதே பதவியில் இருந்து வந்தார். 75 வயதை எட்டியுள்ளதுடன், மூன்று தடவைகள் மாநிலச் செயலாளராக பதவி வகித்த நிலையில், இந்த முறை அவர் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை.

புதிய மாநிலச் செயலாளரைத் தேர்வு செய்வது குறித்த விவாதம் கடந்த சில மாதங்களாக கட்சியின் நிர்வாகிகள் மட்டத்தில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன் ஒருமனதாக மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மு.வீரபாண்டியன், இதற்கு முன் மாநில துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இ.கம்யூ கட்சிக்கு தற்போது தமிழக சட்டமன்றத்தில் 2 எம்எல்ஏக்களும், லோக்சபாவில் 2 எம்பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version