தமிழக அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார். அந்த வகையில், மதுரை மாவட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை மையப்படுத்தி, ‘மதுரை புறநகர் கிழக்கு’ என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கி, அதன் மாவட்டச் செயலாளராக திருநகர் எம்.மருதுபாண்டியனை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகளைத் தொண்டர்களிடையே வேகமாகவும், துல்லியமாகவும் கொண்டு செல்ல ஏற்கனவே சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாவட்டங்களின் எண்ணிக்கையைத் தலைவர் விஜய் மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 32 ஊராட்சிகள் மற்றும் 15 வார்டுகளை முழுமையாக உள்ளடக்கிய இந்தப் புதிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், வரும் தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்குக் களம் அமைக்கும் ஒரு முக்கிய மையமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுள்ள எம்.மருதுபாண்டியன், கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைவர் விஜய்யின் தீவிர ரசிகராகவும், விசுவாசமிக்கத் தொண்டராகவும் இருந்து வருபவர். அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை அறிந்தவர் என்பதாலும், நீண்ட காலமாகக் கட்சியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதாலும் இவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனது நியமனம் குறித்துப் பேசிய மாவட்டச் செயலாளர் மருதுபாண்டியன், “கடந்த 17 ஆண்டுகளாகத் தலைவர் விஜய்யின் அரசியல் சிந்தனைகளையும், மக்கள் நலக் கனவுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே எனது வாழ்நாள் பணியாகக் கொண்டு செயல்பட்டு வந்தேன். எனது நீண்ட கால உழைப்பினை அங்கீகரித்து, இந்தப் பெரிய பொறுப்பை வழங்கிய தலைவர் விஜய்க்கும், வழிகாட்டியாகத் திகழும் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த வெற்றிக்குப் பின்னால் துணையாக நின்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்குத் தலைவணங்குகிறேன்” என உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “எங்களது ஒரே இலக்கும், கனவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் விஜய்யைத் தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்துவதுதான். அந்த லட்சியத்தை நோக்கி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்களை ஒருங்கிணைத்து, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை உறுதி செய்யப் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்வோம்” என மிகுந்த உறுதியுடன் தெரிவித்தார். இந்தப் புதிய நியமனம் மதுரையில் உள்ள தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
