“மதவெறி அரசியலுக்கு மு.க.ஸ்டாலின் சம்மட்டி அடி” பல்லடம் மாநாட்டில் கனிமொழி, உதயநிதி அனல் பறக்கும் பேச்சு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மேற்கு மண்டல மாநாட்டில், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து திமுகவின் முன்னணித் தலைவர்கள் மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த மாபெரும் மாநாட்டில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்குகளைப் பட்டியலிட்டார். “ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக, இன்று ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கூட சிதைத்துவிட்டது. இதற்கெல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை ஒரு கண்டனக் குரலாவது எழுப்பியதுண்டா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக மதக்கலவரம் மற்றும் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்வதாகவும், அத்தகைய சக்திகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நிர்வாகத் திறமையால் ‘சம்மட்டி அடி’ கொடுத்து வருவதாகவும் கனிமொழி புகழாரம் சூட்டினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமித்ஷாவின் அரசியல் வியூகங்கள் குறித்துப் பேசினார். “பீகார் தேர்தலை முடித்துவிட்டு அமித்ஷாவின் அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்று சிலர் நம்மைப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள். ஆனால், சுயமரியாதை மிக்கத் தமிழக மக்களையும், எதையும் சந்திக்கத் துணியும் மகளிர்படையையும் யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அமைதியையும் சமத்துவத்தையும் விரும்பும் தமிழகத்திற்குள் அத்துமீறி நுழையப் பார்க்கும் பாசிச சக்திகளைத் தந்திரமாக விரட்டியடிக்கத் தெரிந்த தலைவர் நம்முடைய முதலமைச்சர்” என்று அவர் ஆவேசமாக முழங்கினார். மேலும், அதிமுகவைப் போல பாஜக-விடம் அடிபணிந்து போவதற்குத் திமுக ஒன்றும் பாசிசத்திற்கு ‘சலாம்’ போடும் கட்சி அல்ல, இது அண்ணாவால் உருவாக்கப்பட்ட பேரியக்கம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழகத்தில் பாசிசத்தையும், அடிமை அரசியலையும் வேரோடு விரட்டியடிக்கும் தேர்தலாக இருக்கும் என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், எஞ்சியுள்ள 100 நாட்களையும் தேர்தல் களமாக மாற்றிக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மகளிரணித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். லட்சக்கணக்கான பெண்கள் திரண்டிருந்த இந்த மாநாடு, தமிழகத்தின் அரசியல் களம் திமுக-விற்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். அமைச்சர்கள், எம்.பி.-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாடு, வரவிருக்கும் தேர்தலுக்கான ஒரு மாபெரும் போர்ப் பிரகடனமாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version