மு.க.முத்து மறைவு : முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி – மதுரையிலிருந்து சென்னைக்கு விரைந்த கனிமொழி

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் முதற்பிறந்த மகனும், திரைநடிப்பில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவருமான மு.க.முத்து இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்நாட்டுத் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சரும், மு.க.முத்துவின் இளைய சகோதரருமான மு.க.ஸ்டாலின், அண்ணனுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் உள்ள தந்தை கலைஞரின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று வந்த திமுக உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தன்னுடைய சகோதரர் மறைந்த செய்தியறிந்ததும், மாணவர்களுடன் மௌன அஞ்சலி செலுத்தி, உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தார்.

மு.க.முத்துவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில்,

“முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்ற செய்தி இடியெனத் தாக்கியது. என்மீது தாய்-தந்தை போல பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்த துயரம் வலிக்கிறது. நாடகங்கள், திரைப்படங்கள், பாடல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது நடிப்பு, வசன உச்சரிப்பு, பாடல்கள் அனைத்தும் அவரை என்றும் மக்கள் நினைவில் வைத்திருக்கும். என் ஆருயிர் அண்ணனுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது இரங்கலில்,

“மு.க.முத்துவின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை கலைஞரைப் போலவே திரைத்துறையில் சாதனை படைத்தவர். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’, ‘பூக்காரி’, ‘அணையா விளக்கு’ உள்ளிட்ட திரைப்படங்கள், அவரது தனித்துவமான நடிப்பையும், சொந்த குரலில் பாடிய பாட்டுகளும், தமிழ் சினிமா ரசிகர்களிடையே மறக்க முடியாத நினைவுகளாக இருக்கின்றன.

Exit mobile version