திருவண்ணாமலை உள்ளிட்ட மலைத் தலங்களில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக அருணாசல மலையில் பௌர்ணமி நாளில் ஒருமுறை கிரிவலம் வந்தால் கர்ம வினைகள் தீரும், புண்ணிய பலன்கள் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஒவ்வொரு அடியும் வறுமையை நீக்கி, காரிய தடைகளை அகற்றி, வாழ்வில் நன்மைகளை தரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இதனால் பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த மாத பௌர்ணமி நாளை (7.9.2025) அதிகாலை 1.48 மணிக்கு தொடங்கி மறுநாள் (8.9.2025) அதிகாலை 12.32 மணிவரை நீடிக்கும்.
ஆனால், இதே வேளையில் சந்திர கிரகணமும் நிகழவுள்ளது. கிரகணம் நாளை இரவு 9.51 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.25 மணிக்கு முடிவடைகிறது. சாஸ்திரப்படி கிரகண காலத்தில் ஜபங்கள், தர்ப்பணம், இறைத் தியானம் செய்வது மிகுந்த பலனளிக்குமென கூறப்படுகிறது.
கிரகண நேரத்தில் கிரிவலம் செய்யலாமா என்ற கேள்விக்கு, பெரியோர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்:
“கிரகண வேளையில் இறைவனைத் தியானித்து, நாமஜபத்தில் நிலைத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒருமுறை சொல்லும் நாமஜபம் பல மடங்கு பலனைத் தரும். கிரிவலமும் இறைவழிபாட்டின் ஒரு அங்கமே. ஆனால் கிரிவலம் செய்யும் போது சாப்பிடக்கூடாது, வேகமாக நடக்கக்கூடாது. கிரகண வேளையில் உணவு, தண்ணீர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் உடல் சோர்வடையக் கூடும். அதனால் சிலர் அந்த நேரத்தில் கிரிவலம் தவிர்க்குமாறு கூறுகிறார்கள்.
ஆனால் உடல்நலனுக்கு பாதிப்பு இல்லாமல் தண்ணீர், உணவு இன்றி கிரிவலம் செய்ய முடிந்தால் தாராளமாகச் செய்யலாம். இல்லையெனில் கிரகண வேளையில் ஓரிடத்தில் அமர்ந்து ஜபம் செய்து, கிரகணம் முடிந்ததும் நீராடி பின் கிரிவலம் வரலாம். இறைவனின் அருள் எப்போதும் பரிபூரணமாகக் கிடைக்கும்” என்கிறார்கள் பெரியோர்கள்.