சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி அருகே உள்ள பெரியகோட்டைப்பட்டி கிராமத்தின் மலை மீது சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு மலைக்கந்தன் ஆலயத்தில், 44-வது ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மலைக்கந்தன் ஆலயம் இப்பகுதியின் மிகப்பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாக விளங்குவதால், ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானுக்குத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு விழாவிற்காக மார்கழி மாதம் முதல் தேதியே பெரியகோட்டைப்பட்டி, பொன்குண்டுபட்டி, நடுவிப்பட்டி, கீழப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காப்புக்கட்டி, கடும் விரதத்தைத் தொடங்கினர்.
திருவிழா நாளான இன்று, விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து சென்று மலைக்கந்தனை வழிபட்டனர். பக்திப் பரவசத்தில் ஆடியபடி வந்த பக்தர்கள், பால்காவடி, சந்தனக் காவடி, சர்ப்பக் காவடி, பன்னீர் காவடி மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக் காவடிகளைச் சுமந்து வந்தனர். இதில் பல பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வரும் ‘பரவைக்காவடி’ எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தியது காண்போரை வியக்க வைத்தது. மலைக் கோயிலை அடைந்ததும் பக்தர்கள் கொண்டு வந்த பாலில் சுவாமிக்கு மகா பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தன அபிஷேகம், திருநீறு அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அபிஷேகங்கள் முடிந்த பின், மலைக்கந்தன் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், அன்னதானம் உள்ளிட்ட வசதிகளை விழாக்குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். தைப்பூசத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நாளை மறுநாள் கிராம மக்கள் சார்பில் பிரம்மாண்டமான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஞ்சுவிரட்டு போட்டியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
















