பள்ளிக்குச் சென்ற சிறுமி மாயம்… காணாமல் போனதாக நாடகமாடிய தாத்தா கைது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி நகரைச் சேர்ந்த ராஜா – மீனா தம்பதியருக்கு மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

கடந்த மாதம் 30ஆம் தேதி, ராஜா – மீனாவின் மகள் கவிஷா அங்கன்வாடி மையத்துக்கு சென்ற பின்னர் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கவலையடைந்த தந்தை ராஜா தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேட்டுக்கடையில் குழந்தை மீட்பு
இதன்போது, கடந்த 4ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மேட்டுக்கடை பகுதியில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சிறுமியை கொண்டு வந்து விட்டு சென்றார். போலீசார் அவளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த மர்ம நபரை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டது.

தாத்தா, நண்பர் கைது
இன்று போலீசார், சங்ககிரி கள்ளுக்கடை பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் சிறுமியின் தாத்தா லோகிதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆரம்ப விசாரணையில், லோகிதாஸ் மற்றும் குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

லோகிதாஸ், தனது மகன் ராஜா பேத்தியான கவிஷாவை அடித்து துன்புறுத்துவதாக குமாரிடம் கூறி, சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக விசாரணையில் வெளிவந்துள்ளது. பின்னர், போலீசார் குழந்தையை தேடும் நடவடிக்கை நடப்பதை அறிந்த குமார், பயந்து, நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மேட்டுக்கடையில் அவளை இறக்கிவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பள்ளிக்குச் சென்ற சிறுமியை தாத்தாவே கடத்திச் சென்று, காணாமல் போனதாக நாடகமாடிய இந்த சம்பவம், சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version