பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு தீர்வுகாண 2020ஆம் ஆண்டில் தேசிய உதவி மையம் உருவாக்கப்பட்டது. இந்த உதவி மையத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 6.34 லட்சம் புகார் அழைப்புகள் வந்துள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மாநிலத்திலிருந்து மட்டும் 3.4 லட்சம் அழைப்புகள் வழந்துள்ளன.
அதாவது, இந்தியா முழுவதும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான ஒட்டுமொத்த புகார் அழைப்புகளில் உத்தர பிரதேசத்தின் பங்கு மட்டும் 53 சதவீதம் ஆகும். இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் பீகார் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பீகாரிலிருந்து 59 ஆயிரத்து 25 புகார் அழைப்புகள் வந்துள்ளன. இது மொத்த அழைப்புகளில் 9 சதவீதம் ஆகும். 40 ஆயிரத்து 228 அழைப்புகளுடன் ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும், 29 ஆயிரம் அழைப்புகளுடன் தலைநகர் டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளன.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மாநிலங்களவையில் அளித்த தகவலின்படி, இந்த மையம், குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் -1955, பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் – 1989 ஆகிய சட்டங்களின் கீழ் வரும் புகார்களைப் பதிவு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
2020-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த உதவி மையத்திற்கு, அதிகபட்சமாக 2023-ஆம் ஆண்டில் மட்டும் 3.4 லட்சத்துக்கும் அதிகமான புகார் அழைப்புகள் வந்துள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மையம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறியுள்ள உதவி மையம், 14566 என்ற டோல்ஃபிரி எண் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.