கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று நடந்த விவாதம் சூடுபிடித்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமியை “பொய்பாடி பழனிசாமி” என குறிப்பிடும் வகையில் கடுமையாக தாக்கி பேசினார்.
“கரூர் துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. சட்டமன்றத்திலே முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார். எந்த விஷயத்திலும் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று முயன்று, அதைக் கொண்டு அரசியல் ஆதாயம் பெறும் கனவு காண்கிறார்,” என்று அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திருச்சியில் மக்கள் மயக்கம் அடைந்தனர், நாமக்கல்லில் பலர் காயமடைந்தனர். இவை அனைத்திற்கும் ஆதாரங்கள் உள்ளன.
விஜய் பிரசாரத்தின் போது, வழக்கம்போல மக்கள் வரவேற்பை ஏற்காமல், காருக்குள் உட்கார்ந்தபடியே இருந்தார். பிறகு, காரின் லைட்டையும் அணைத்தனர். இதனால் மக்கள் அவரை பார்க்க முடியாமல் நெரிசலாக முன் நோக்கி ஓடினர். அந்த குழப்பத்தில்தான் மூச்சுத்திணறி பலர் உயிரிழந்தனர். இது தவறான பிரசாரம் முறையின் விளைவாகும்,” என்றார்.
அமைச்சர் மேலும் வலியுறுத்தியதாவது, “அரசு உடனடியாக துரித நடவடிக்கை எடுத்ததால்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எந்த அளவுக்கு கூட்டணிகள் சேர்ந்தாலும், திராவிட மாடல் 2.0 ஆட்சியை நிறைவேற்றும் சாதனையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெறுவார்,” எனவும் தெரிவித்தார்.