2014, 2017 தீர்ப்புகளை அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன்பு 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, சமீபத்திய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக அதிக கவனம் பெற்றுள்ளது இந்நிலையில், இன்று ஐகோர்ட் கிளை முன்பு கூடிய வழக்கறிஞர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்: 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்புகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமாவளவன் மற்றும் சு. வெங்கடேசன் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசி வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். நீதிமன்ற வளாகத்தில், ‘நீதிமன்றத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ என்ற முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில், 2014 ஆம் ஆண்டு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பையும், 2017 இல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். நாங்கள் எந்த ஒரு நீதிபதிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவும் போராட்டம் நடத்தவில்லை. திருப்பரங்குன்றம் வழக்கில், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அரசு உறுதியாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை,” என்று தெரிவித்தார். வழக்கறிஞர்கள் பசும்பொன் பாண்டியன், பஷீர்தீன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தற்போது நீதிமன்றம், அரசியல் கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பல தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருவதால், இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version