மலைகளின் அரசி என்று உலகப்புகழ் பெற்ற நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பயணிகள் ஊட்டியை முற்றுகையிடுவது வழக்கம். அவ்வாறு ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதலில் அரசு தாவரவியல் பூங்காவைப் பார்வையிட்டு, அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி படகு இல்லத்திற்குச் செல்வதை முதன்மை விருப்பமாகக் கொண்டுள்ளனர். இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாகத் திகழ்கிறது.
தற்போது ஊட்டி ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள் மற்றும் 105 மிதி படகுகள் (Pedal Boats) என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தப் படகு சவாரியின் போது, ஏரியைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகள், மான் பூங்காவில் உள்ள கடமான்கள் மற்றும் ஏரிக்கரையோரம் ஓய்வெடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகள் போன்ற இயற்கை காட்சிகளைப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும், இங்குள்ள மினி ரயில், தேனிலவு படகு இல்லம், சிறுவர் பூங்கா மற்றும் குதிரை சவாரி போன்றவை பயணிகளுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இதற்காகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இருவர் செல்லும் மிதி படகுக்கு ரூ.375 முதல் 10 பேர் செல்லும் மோட்டார் படகுக்கு ரூ.1175 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023-ம் ஆண்டு 23,91,460 பேர் வருகை தந்த நிலையில், 2024-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 23,16,662 ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டில் (2025) இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 19,66,631 ஆக, அதாவது சுமார் 20 லட்சம் என்ற அளவிலேயே பதிவாகியுள்ளது. இந்தச் சரிவுக்கு நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய அமல்படுத்தப்பட்டுள்ள ‘இ-பாஸ்’ நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான கட்டுப்பாடுகளே முக்கியக் காரணம் என்று சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இ-பாஸ் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகப் பல சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. வரும் கோடை காலத்திலாவது இந்தச் சரிவை ஈடுகட்டத் தேவையான கூடுதல் வசதிகளைச் செய்ய வேண்டும் என்பதே சுற்றுலாத் தொழில் புரிவோரின் கோரிக்கையாக உள்ளது.
