இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர் – அமித் ஷா குற்றச்சாட்டு

புதுடில்லி : இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் யாராலும் அதைச் சாதிக்க முடியவில்லை, என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. ஆனால், நாம் நமது சொந்த மொழியை போற்றி, அதில் பேசவும் சிந்திக்கவும் வேண்டும். ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன், என்றார்.

ஹிந்தி – மற்ற இந்திய மொழிகளுக்கு நண்பன் :

“ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். ஹிந்தியும், பிற இந்திய மொழிகளும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றம் பெறச்செய்யலாம். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவை பிரிக்க மொழி அரசியல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை,” என அமித் ஷா குறிப்பிட்டார்.

2047ல் சிறந்த இந்தியா உருவாகும் :

2047 ஆண்டுக்குள் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்க நமது மொழிகள் ஒரு முக்கிய சக்தியாக மாறும். மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் மற்றும் அரசு பணிகளிலும் இந்திய மொழிகளை விரிவாக பயன்படுத்த வேண்டும். இதற்காக, மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

13 இந்திய மொழிகளில் தேர்வு :

முன்னதாக, CAPF கான்ஸ்டபிள் தேர்வுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே எழுத அனுமதி இருந்தது. இப்போது அதை மாற்றி 13 இந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று, 95% பேர் தங்களது தாய்மொழியில் தேர்வு எழுதுகிறார்கள் என்பதில் பெருமை உணர்கிறேன். இது இந்திய மொழிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதைக் காட்டுகிறது, என அமித் ஷா தெரிவித்தார்.

மொழி என்பது அடையாளம் – அடிமைத்தனத்திலிருந்து விடுபட மொழியை போற்ற வேண்டும்.

மொழி என்பது வெறும் தொடர்பு கொள்ளும் கருவி மட்டும் அல்ல; அது ஒரு மனநிலை. ஒருவர் தனது மொழியில் பெருமை கொள்ளாதவரை, அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நம்மை விடுவிக்க முடியாது என்றார்.

Exit mobile version