நடிகர் கமல்ஹாசனிடம் காதல் சொன்னதாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பகிர்ந்த கருத்துகள், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கி 1500-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வரும் இந்த நிகழ்ச்சி, அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. “என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா” என்ற வசனத்தால் சமூக வலைதளங்களில் பரவலான பார்வையாளர்களை ஈர்த்தவர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது தனித்துவமான பங்களிப்பால் பாராட்டைப் பெற்றுவருகிறார். இந்த நிகழ்ச்சியில், தனது கல்லூரி நாட்களில் நடிகர் கமல்ஹாசனை காதலித்ததையும், அவரை சந்தித்த போது “நீங்கள் என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்” என அவர் கூறியதையும், நகைச்சுவையுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், சிலர் அந்தக் கருத்தை தவறாக புரிந்து செய்தியாக மாற்றியதைக் கண்டித்துள்ளார் லட்சுமி. இதுகுறித்து, “அந்த நிகழ்ச்சியில் நான் அந்த அனுபவத்தை சிரிக்கச் சிரிக்கச் சொன்னேன். என் நண்பர்கள் இதை நகைச்சுவையாக கலாய்த்தார்கள். ஆனால் சிலர் இதைப் போக்கற்ற முறையில் செய்தியாக மாற்றுகிறார்கள். இது நியாயமற்றதுமே அல்லாமல் நாகரிகமற்றதும் கூட,” என தெரிவித்துள்ளார்.