ஜம்மு – காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபையற்ற யூனியன் பிரதேசமாக உள்ளது. 2019ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அதன்பின், லடாக்கிற்கு மாநில அந்தஸ்தும், சுயாட்சியையும் வழங்கும் அரசியலமைப்பின் 6ஆம் அட்டவணை அந்தஸ்தை கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் அவர் உண்ணாவிரதத்தில் இருந்தபோது, லடாக்கில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக் தலைமையிலான அமைப்பே காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும், அவரது வெளிநாட்டு நிதி அனுமதி ரத்து செய்யப்பட்டதுடன், தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) கீழ் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது வாங்சுக்கிடம் லடாக் காவல்துறையினரும் மத்திய உளவுத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை எதிர்த்து, அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். “வாங்சுக்கிற்கு எதிராக NSA பயன்படுத்திய முடிவுக்கான காரணத்தை அறிய உரிமை உண்டு. செப்டம்பர் 26 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ள கணவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அவரது உடல்நிலை குறித்து கூட எந்த தகவலும் தரப்படவில்லை,” என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாங்சுக் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பில் உள்ளார் என்ற குற்றச்சாட்டையும் அங்மோ முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
“என் கணவர் காவலில் வைக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன? நீதிமன்றத்தில் அவர் தனது உரிமைகளை நிலைநாட்ட முடியாதா? இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்ட உரிமை நமக்கில்லைதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
