“தென் இந்தியாவின் துவாரகை” என்று பக்தர்களால் போற்றப்படும், மன்னார்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளைக் காரணமாக, வரும் ஜனவரி 28-ம் தேதி அன்று வெகு விமரிசையாக இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது.
மொத்தம் 23 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்கோயிலில், கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்புப் பணிகள் சுமார் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கோயிலில் உள்ள நான்கு ராஜகோபுரங்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார்.
அரசு நிதி மற்றும் பக்தர்கள், பல்வேறு தரப்பினர் அளித்த நன்கொடைகள் ஆகியவற்றின் பங்களிப்புடன், இக்கோயிலில் பாலாலயம் நடத்தப்பட்டதையடுத்து புனரமைப்புப் பணிகள் வேகமாகத் தொடங்கப்பட்டன. கோபுரங்கள், மண்டபங்கள், சுற்றுச் சுவர்கள் மற்றும் திருக்குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாகசாலை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன்படி, பந்தக்கால் நடப்பட்டு, கோயில் வளாகத்திற்குள்ளேயே சுமார் 3500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் புனிதப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன் மற்றும் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பணிகளை மேலும் விரைவுபடுத்துவது மற்றும் தடையின்றி நடத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தப் பணிகளின்போது பிரசன்னா தீட்சிதர் உடனிருந்தார். தமிழகத்தின் தொன்மை வாய்ந்த வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலின் கும்பாபிஷேகம், தமிழ்நாட்டுப் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
