இந்தியாவில் மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் சிறப்பு பெற்றதாகக் கருதப்படுவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆகும்.
இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தொழில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமணத் தடைகள் நீக்கம், திராத நோய்கள் தீர்வு, மனநலம் சீராதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் நேர்ச்சையாக 100-க்கும் மேற்பட்ட வேடங்களில் திகழ்வது வழக்கம். அதில் ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
இதேபோல் விநாயகர், பார்வதி, பரமசிவன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் தங்கள் வசதிக்கேற்ப 61, 41, 31, 21 நாட்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதாலும், 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும், அதிகாலை முதலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குவிந்தனர். கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டதால், அதற்கு முன்னரே கடலில் நீராடிய பக்தர்கள், கடற்கரையில் விற்கப்படும் துளசி மாலை, பாசிமாலை வாங்கி, கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து, கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்து அணிந்து, விரதத்தைத் தொடங்கினர்.