தங்கச் சங்கிலியை ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

சாலையில் கண்டெடுத்த சுமார் ₹5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை, சிறிதும் தயக்கமின்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவரின் நேர்மையான செயலைப் பாராட்டி, சாயல்குடி காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் வைத்து அவர்களைக் கௌரவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீரபாண்டி, சந்தோஷ், மகாராஜன் ஆகிய மூவரும், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி மாலை பள்ளி முடிந்த பிறகு தங்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வழியில் சாலையில் கிடந்த ஒரு தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்தனர்.

உடனடியாக அந்தச் சங்கிலியை அருகிலுள்ள ஒரு நகைக்கடைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என்று தெரிய வந்தது. இவ்வளவு பெரிய தொகையைக் கொண்ட நகையாக இருந்தபோதும், மாணவர்கள் மூவரும் அந்த நகையை தங்களுக்கென எடுத்துக்கொள்ள நினைக்கவில்லை. நகை தங்கம்தான் என்று உறுதியானதை அடுத்து, மாணவர்கள் மூவரும் நேராக சாயல்குடி காவல் நிலையத்திற்குச் சென்று, தாங்கள் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மாணவர்களின் இந்தச் செயலால் நெகிழ்ந்துபோன சாயல்குடி காவல் நிலைய அதிகாரிகள், உடனடியாக அவர்களைப் பாராட்டினர். மேலும், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையில், அந்த மூன்று மாணவர்களுக்கும் வாழ்த்து ரொக்கப் பரிசு வழங்கி, அவர்களின் நேர்மையைக் கௌரவித்தனர்.

மாணவர்களின் நேர்மைக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தைக் கண்டு, அவர்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இச்சம்பவம், பள்ளி மாணவர்களின் மத்தியில் நேர்மையின் மதிப்பை உணர்த்தும் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. தொலைந்த நகையின் உரிமையாளரைக் கண்டறியும் பணியில் தற்போது சாயல்குடி காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version