கொல்கத்தா : தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில், 24 வயது மாணவி ஒருவரிடம் கடந்த ஜூன் 25ஆம் தேதி நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், ‘மாம்பழம்’ என அழைக்கப்படும் முன்னாள் மாணவர் மோனோஜித் மிஸ்ரா (31), மற்றும் தற்போதைய மாணவர்கள் புரோமித் முகர்ஜி, ஜைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீசாரின் விசாரணையில் உள்ளனர்.
புதிய தகவல்கள் வெளியான நிலையில்…
போலீசார் நடத்திய விரிவான விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, மோனோஜித் மிஸ்ரா, மாணவியிடம் பாலியல் வன்புணர்வு நிகழ்த்தியதை, அவரது நண்பர்கள் புரோமித் மற்றும் ஜைத் அகமது வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டியதாலும், பயந்த மாணவி முதலில் இந்த சம்பவத்தை வெளிக்கொணர மறுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள், மாணவி போலீசிடம் புகார் கொடுப்பதில்லை என்ற நம்பிக்கையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மிரட்டல் :
இந்தக் குற்றச்செயலை திட்டமிட்டு செயல்பட்டதற்கான பல ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன. போலீசாரின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட மாணவியை தொடர்ந்து கண்காணித்து வந்த குழுவினர், அவர் புகார் அளிக்கிறாரா என்பதை அறிந்து கொள்ள கஸ்பா காவல் நிலையத்தைக் கூட கவனித்துள்ளனர்.
மேலும், மோனோஜித், ஒரு கல்லூரி ஊழியரிடம், “பாதிக்கப்பட்டவர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றாரா?” என விசாரித்ததாகவும், போலீசார் தன்னை பின்தொடர்வதை உணர்ந்ததும் தனது வழக்கறிஞர்கள் மற்றும் சீனியர்களிடம் உதவி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்களிடம் இருந்து எந்த உதவியும் பெற முடியாததால், இறுதியாக மோனோஜித் மற்றும் மற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முந்தைய பகை – பழிவாங்கும் சதி ?
கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்தே மாணவிக்கும் மோனோஜித்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், ஒருநாள் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இந்தச் செயல்களை மேற்கொண்டதாகவும் மோனோஜித் தனது நண்பர்களிடம் கூறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தற்போது மேலும் விரிவாக விசாரணை செய்யப்படுகின்ற நிலையில், மாநிலமெங்கும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. மாணவியிடம் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் முழுமையான கோரிக்கையாக இருக்கிறது.