பழநி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்

தமிழகத்தின் முதன்மையான முருகன் திருத்தலங்களில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானதாகும். இந்த மூலக்கோயிலின் கட்டுப்பாட்டில் 49 உபகோயில்கள் உள்ளன. அவற்றில் சன்னதி வீதியில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதாகும்.

நக்கீரர் மற்றும் அருணகிரிநாதரால் முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடாக வர்ணிக்கப்பட்ட பெருமை இந்தக் கோயிலுக்கு உண்டு. பழநியின் முதன்மைத் திருவிழாவான பங்குனி உத்திரத்திற்கு கொடியேற்றம் மற்றும் திருக்கல்யாணம் போன்ற முக்கிய சடங்குகள் இந்த திருஆவினன்குடி கோயிலில்தான் நடைபெறும். பழநிக்கு வரும் பக்தர்கள் பலரும், முதலில் இங்கு எழுந்தருளியுள்ள குழந்தை வேலாயுதசுவாமியை தரிசித்த பிறகே, மலைக்கோயிலுக்குச் சென்று நவபாஷாண முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.

திருஆவினன்குடி கோயிலில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, 12 ஆம் ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் குடமுழுக்கு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காகக் கோயிலில் திருப்பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக மேளதாளங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டன.

காலை 6.30 மணியளவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க, கோயிலின் மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு விழாவை கோலாகலமாக நடத்தி முடித்தனர். தொடர்ந்து, பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. குடமுழுக்குக்குப் பிறகு, மூலவரான குழந்தை வேலாயுதசுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் கூடிய மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி உள்ளிட்ட அரசுப் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கை முன்னிட்டு, பழநி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Exit mobile version