கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மன்னவனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மற்றும் குங்கிலியம் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கடத்தலைத் தடுக்கத் தவறியதாக மன்னவனூர் வனச்சரகர் உள்ளிட்ட நான்கு வனத்துறை ஊழியர்களை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலப்பரப்பில் சுமார் 70% வனப்பகுதியைக் கொண்ட கொடைக்கானலில், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்ட அயல்நாட்டு மரங்களான சவுக்கு (Casuarina) மற்றும் குங்கிலியம் (Acacia) உள்ளிட்ட மரங்களை அகற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், பூம்பாறை, மன்னவனூர், பேரிஜம், கொடைக்கானல் உள்ளிட்ட வனச்சரகங்களில் உள்ள குறித்த எண்ணிக்கையிலான குங்கிலியம் மற்றும் சவுக்கு மரங்களை அப்புறப்படுத்துவதற்காக வனத்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள், வனத்துறை அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை மீறி, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பல ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆரோக்கியமான மரங்களையும் வெட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தச் சம்பவம் குறித்து, தமிழ்நாடு வன உயிரினக் குற்றத் தடுப்புப் பிரிவு (Wildlife Crime Control Bureau) மற்றும் திண்டுக்கல் வனப் பாதுகாப்புக் படை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக மன்னவனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மன்னவனூர் மற்றும் கவுஞ்சி போன்ற பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை நேரடியாக ஆய்வு செய்தபோது, பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி சட்டவிரோதக் கடத்தல் நடந்திருப்பது உறுதியானது.

சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் வனப்பகுதிக்குள் சென்று இவ்வாறு அத்துமீறி மரங்கள் வெட்டுவதைத் தடுக்கத் தவறியதுடன், உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், மன்னவனூர் வனச்சரக அலுவலர் (ரேஞ்சர்) திருநிறைச்செல்வன், வனவர்கள் சுபாஷ் மற்றும் அம்ச கணபதி, வனக் காவலர் வெங்கடேஷ் ஆகிய நான்கு நபர்களை, சென்னை வனத்துறை தலைமை அலுவலக முதன்மை வனப் பாதுகாவலர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் மன்னவனூர் மலைக்கிராமத்தில் உள்ள ஒரு வனச்சரகத்தில், வனச்சரகர், வனவர்கள் மற்றும் வன காவலர் என நான்கு முக்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களின் துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கீடு செய்யும் பணியில் 30-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த உதவி வனப் பாதுகாவலர், மரங்களின் சேத மதிப்பை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று, ஒப்பந்த விதிகளை மீறிச் செயல்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீதும், இந்தச் சட்டவிரோதக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்ற அதிகாரிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களில் நடைபெறும் இதுபோன்ற முறைகேடுகள், வன வளங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இந்த வழக்கை ஓர் உதாரணமாகக் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version