திருமண வீட்டில் ஏற்பட்ட சோகச் சம்பவம் ஹரியானா மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பானிபட் அருகே நவுலதா கிராமத்தில் குடும்பத் திருமண விழாவுக்கு வந்திருந்த 6 வயது சிறுமி மர்மமாக உயிரிழப்பு.
திடீரென காணாமல் போன குழந்தை
திருமணக் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்த வீட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த வேளையில், 6 வயது சிறுமி திடீரென காணாமல் போனது. ஆரம்பத்தில் குடும்பத்தினர் குழந்தை அருகே எங்காவது விளையாடப் போனிருப்பாள் என்று நினைத்தனர். ஆனால் தேடியும் தெரியாததால் பீதியடைந்தனர்.
பக்கெட் உள்ளே கிடந்த சடலம்
வீட்டுக்குள் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய பக்கெட் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதைத் திறந்த போது, சிறுமியின் தலையைக் கீழே நுழைந்த நிலையிலான சடலம் கண்டெடுக்கப்பட்டது. குடும்பத்தினர் அதிர்ச்சியில் புரண்டு அழுதனர். அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதும், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் தாத்தா போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. சிசிடிவியில், சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிக்குச் செல்வது காணப்பட்டது. பின்னர் அந்த பெண் சிறுமியின் அத்தை முறை பூனம் (34) என்பது தெரியவந்தது.
விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்
காவல் துறையினர் பூனத்தை விசாரித்த போது, அவள் கூறிய காரணம் அனைவர் மனதையும் உலுக்கியது. “எனக்கு பொறாமை… யாரும் என்னைவிட அழகாக இருக்கக் கூடாது. அதனால்தான் இப்படி செய்தேன்” என பூனம் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி அழகாக இருந்த காரணத்தால் அவள்மீது வெறுப்பு உருவாகி, மாடியில் தண்ணீர் எடுத்து வர சொல்லி அழைத்து சென்று, பக்கெட்டில் தலையை அழுத்தி கொன்றதாகச் சொல்லப்படுகிறது. கொலை செய்துவிட்டு, எதுவும் நடக்காதது போல கீழே வந்து திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஒரே கொலையல்ல: பழைய வழக்குகள் வெளிச்சம்
விசாரணை மேலும் நகர்ந்தபோது மிகப் பெரிய அதிர்ச்சி தகவல் வெளியானது: பூனம் இதற்கு முன்பும் குழந்தைகளை கொன்றிருக்கலாம் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2023ஆம் ஆண்டு, தனது மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவை இதே முறையில் கொன்றதாகவும், இஷிகாவின் 3 வயது தம்பியும் அதை பார்த்துவிட, அவனையும் பக்கெட்டில் மூழ்கடித்து கொன்றதாகவும், பூனம் தன்மேல் முந்தைய சந்தேகங்கள் வராமல் இருப்பதற்காக அந்த சம்பவங்களை விபத்து மரணம் போல காட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாநிலம் முழுவதும் அதிர்ச்சி
பல ஆண்டுகளாக குழந்தைகளை குறிவைத்து கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் பரவி, ஹரியானா முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. பூனம் போலீஸ் காவலில் இருக்கும் நிலையில், கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
