நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களிடமிருந்து சிறுநீரகத்தை (கிட்னி) 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி வாங்கும் நெட்வொர்க் செயல்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் சத்யா நகர் பகுதிகளில் விசாரணையை மேற்கொண்டனர். இதில், ஆலாம்பாளையம் பேரூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் இடைத்தரகராக (புரோக்கர்) கிட்னி விற்பனை செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
ஆனால் அவரது வீடு பூட்டி இருந்ததால், அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஆனந்தனை கைது செய்து, உரிய விசாரணை நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் திமுகவின் ஆலாம்பாளையம் பேரூர் பேச்சாளராகவும் கட்சிச் நிகழ்வுகளில் பங்கேற்று வந்ததுமான தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கிட்னி விற்பனை தொடர்பான புகாருக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைக்கும்; அதன் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு இதே பிரச்சனை எழுந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற புகார் வருவது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
அத்துடன், மருத்துவ பணியாளர்களில் குறைவு இல்லையெனவும், தற்போது பணியமர்த்தப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், “வறுமையில் இருக்கும் பெண்களின் கிட்னிகளையே குறி வைத்து நடக்கும் இக்கும்பலின் செயல்களை காவல்துறை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நேரில் புகார் அளிக்காததை காரணமாக்கி போலீசார் மெத்தனமாக நடக்கக்கூடாது” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தச் செயற்பாடுகள் முடங்கியிருந்த நிலையில், மீண்டும் இதுபோன்று ஏழைகளை குறிவைத்து நடக்கும் கிட்னி விற்பனை வலைத்தளங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன