ஏமனில் பணியாற்றியுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு எதிராக வரும் ஜூலை 16ம் தேதி நிறைவேற்றப்பட உள்ள மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா (வயது 38) எனும் நர்ஸ், மேற்காசிய நாடான ஏமனில் வேலை பார்த்து வந்தார். அங்கு, தனது பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை விஷ ஊசி மூலம் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அந்தத் தண்டனை ஜூலை 16ம் தேதி நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மரண தண்டனையை தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தக் கோரி, மூத்த வழக்கறிஞர் ராகேந்திர பசந்த், இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமர்வுக்கு முன்பாக அவசர வழக்காக பட்டியலிட கோரப்பட்டது.
வழக்கறிஞர், “தண்டனை நிறைவேற்றப்படும் தேதி ஜூலை 16; வெறும் இரண்டு நாட்களே உள்ளன. எனவே இன்று அல்லது நாளை விசாரணை நடத்த வேண்டியுள்ளது” எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற பெஞ்ச், ஜூலை 14ம் தேதி வழக்கை பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளது.