ஹைதராபாத் : பிஆர்எஸ் (பாரத் ராஷ்ட்ர சமிதி) கட்சியில் இருந்து கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தனது மகளும், கட்சியின் முக்கிய முகத்துவாரமாக விளங்கிய கவிதாவை இடைநீக்கம் செய்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை தொடங்கி, தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய கே. சந்திரசேகர ராவ், 2014 முதல் 2023 வரை முதலமைச்சராக பதவி வகித்தார். பின்னர் தேசிய அரசியலுக்கு விரிவடைய கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என மாற்றினார்.
ஆனால் ஆட்சியை இழந்த பிறகு, கட்சியில் உட்கட்சி மோதல்கள் வெடித்தன. குறிப்பாக சந்திரசேகர ராவ் – கவிதா இடையே கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும், சகோதரர் ராமாராவுடனும் முரண்பாடுகள் அதிகரித்தன. சமீபத்தில் கவிதா, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து, ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.
கட்சியின் விசாரணை தொடர்பான விவகாரங்களில் ஹரிஸ் ராவ் தான் காரணம் எனக் கூறியிருந்த கவிதா, காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையைப்பற்றியும் கடுமையாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், கட்சியின் ஒற்றுமையைப் பாதித்ததாகக் கூறி, கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் முடிவை கே. சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தந்தையால் மகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.