பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகல் அறிவித்தார் கவிதா – எம்எல்சி பதவியையும் ராஜினாமா

ஹைதராபாத்: பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, இன்று அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு, எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையின் தூண் சரிந்த சம்பவம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எம்எல்சி கவிதா தமது கட்சியினர்மீதே குற்றச்சாட்டுகளை சுமத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அணை கட்டுமானத்தின்போது, அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ் (கவிதாவின் தாய்மாமா) மற்றும் எம்பி சந்தோஷ் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் தனது தந்தைக்கு அவப்பெயர் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கவிதாவின் இந்த குற்றச்சாட்டு பிஆர்எஸ் கட்சியில் கடுமையான உள்கட்சி சச்சரவுக்கு வழிவகுத்தது. இதன் பின்னணியில், நேற்று அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குறிப்பிடத்தக்கது என்னவெனில், அந்த உத்தரவை கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவே பிறப்பித்தார்.

தந்தை – மகள் மோதலால் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று கவிதா தனது கட்சிவிலகலையும், எம்எல்சி ராஜினாமாவையும் அறிவித்துள்ளார்.

Exit mobile version